Responsive Menu
Add more content here...

தமிழறிஞர் சுந்தர சண்முக முதலியார்

Visits:291 Total: 2674455

செங்குந்தர் கைக்கோள முதலியார்

குலத் தோன்றல்
தமிழறிஞர் சுந்தர சண்முகனார் 


(
13 சூலை 1922 – 30 அக்டோபர் 1997)

 

இவர் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர், தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர்.

பிறப்பு
கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் ஊரில்
செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தில் சுந்தரம் முதலியார் – அன்னபூரணி அம்மாள் இணையருக்கு மகனாக 1922 சூலை 13 ஆம் நாள் சுந்தர சண்முகனார் பிறந்தார். இவரது இயற்பெயர் சண்முகம். பின்னாளில் தன் தந்தையின் பெயரைத் தன் பெயருக்கு முன்னர் இணைத்துச் சுந்தர சண்முகனார் ஆனார்.

கல்வி தகுதி:
சுந்தர சண்முகனார் கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தூய வளனார் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். அதேவேளையில் திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியார் மடலாயத்தில் ஐந்தாம் பட்டத்து அடிகளுக்கு மாணவராகச் சேர்ந்தார். அவ்வடிகளின் அறிவுரையின்படி 1936ஆம் ஆண்டில் தனது பதினான்காம் அகவையில் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்துவான் வகுப்பில் சேர்ந்தார். 1939ஆம் ஆண்டில் வித்துவான் பட்டம் பெற்றார். பின்னர் தனியே படித்து இடைநிலை வகுப்பையும் இளங்கலைப் பட்டத்தையும் நிறைவு செய்தார்.
1952 ஆம் ஆண்டில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் தேர்ந்தார்.
இவைதவிர பின்வரும் கல்விச் சான்றிதழ்களையும் சுந்தர சண்முகனார் பெற்றிருந்தார்.

1958ஆம் ஆண்டில் கோயமுத்தூர் பீளைமேட்டில் தமிழக பொதுக்கல்வித்துறை நடத்திய முதியோர் இலக்கியப்பண்ணைச் சான்றிதழ்.

சென்னை சைவ சிந்தாந்தப் பெருமன்றத்தின் சைவ சித்தாந்தச் சான்றிதழ்

தருமபுர ஆதீனம் வழங்கிய சமயக் கல்விப் பயிற்சிச் சான்றிதழ்

புதுச்சேரி பிரஞ்சு இன்சுடிடியூட் வழங்கிய பிரஞ்சு பட்டயம்

தமிழ்ப் பணி:
ஞானியார் அடிகளின் பரிந்துரையைப் பெற்று மயிலம் சிவஞானபாலைய அடிகள் தமிழ்க் கல்லூரியில் தனது பதினெட்டாம் அகவையில் 1940 ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றார். 1946 ஆம் ஆண்டில் கல்லூரியின் துணை முதல்வராகப் பணியாற்றிய நிலையில் தனக்கு ஏற்பட்ட மூளைக்கட்டியின் (Brain Tumor ) காரணமாகப் பணியிலிருந்து விலகினார்.
1947 ஆம் ஆண்டில் புதுச்சேரியில் தன் ஓரகத்தான் (தன் மனைவிக்கு உடன்பிறந்தக்கு கணவர்) சிங்கார குமரேசன் உதவியுடன் பைந்தமிழ் பதிப்பகம் என்னும் நூல் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் 1997 ஆம் ஆண்டு வரை செயற்பட்டது.
1948 ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரை புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் 1958ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை புதுச்சேரி அரசினர் ஆசிரியர் பயிற்சி நடுவத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றார்.
தமிழ்நூல் தொகுப்புக்கலை என்னும் நூலின் வழியே தமிழ்நூல் தொகுப்பு முறையியலை சுந்தர சண்முகனார் வரையறுத்திருந்தார். அதனைக் கண்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் அப்பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைத்தலைவர் பதவியை வகிக்குமாறு 1982 ஆம் ஆண்டில் அழைப்புவிடுத்தார். சுந்தர சண்முகர் அவ்வழைப்பையேற்று அப்பணியில் சேர்ந்தார். ஆனால் மூளைக்கட்டி நோய்க்கொடுமை காரணமாக 1983 ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து விலகினார். பின்னர் தனது இறுதிநாள் வரை புதுவையில் தங்கி நூலாக்கப்பணிகளில் ஈடுபட்டார்.
மேலும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கல்விக்குழுவில் வாழ்நாள் உறுப்பினராகப் பணியாற்றினார்.

படைப்புக்கள்:

சுந்தர சுந்தரனார் இடையறாது தொல்லைகொடுத்த நோய்க்கு இடையிலும் நுண்மான் நுழைபுலம் துலங்கப் பல்வேறு துறைகளில் தொடர்ந்து நூல்கள் எழுதினார். அவற்றின் பட்டியல் வருமாறு:

வ.எண் ஆண்டு நூல் பொருள் குறிப்பு
01 1947 வீடும் விளக்கும் வாழ்வியல்
02 1948 குழந்தைப் பாட்டு கவிதை
03 1948 தனித்தமிழ் கிளர்ச்சி கவிதை பாரதிதாசனின் இந்நூலுக்கு முன்னுரைப் பாடல் எழுதியிருக்கிறார்.
04 1948 தமிழ்த் திருநாள் அல்லது பொங்கல் வாழ்த்துக் கீர்த்தனைகள் கவிதை
05 1948 காந்தியின் நாகரிகம் வரலாறு
06 1948 ஆத்திசூடி அமிழ்தம் சிறுகதைகள்
08 1948 சூலை 30 திருக்குறள் தெளிவுரை -1 உரைநூல் முதற் படிவ (6ஆம் வகுப்பு) மாணவர்களுக்காக 50 குறள்களுக்கு எழுதப்பட்ட பதவுரை, கருத்துரை, இலக்கணக் குறிப்பு ஆகினவற்றைக் கொண்டது.
09 திருக்குறள் தெளிவுரை – 2 உரை நூல் இரண்டாம் படிவ (7ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான குறள்களுக்கு எழுதப்பட்ட பதவுரை, கருத்துரை, இலக்கணக் குறிப்பு ஆகினவற்றைக் கொண்டது.
10 1949 சூலை 1 திருக்குறள் தெளிவுரை – 3 உரைநூல் மூன்றாம் படிவ (8ஆம் வகுப்பு) மாணவர்களுக்காக 70 குறள்களுக்கு எழுதப்பட்ட பதவுரை, கருத்துரை, இலக்கணக் குறிப்பு ஆகினவற்றைக் கொண்டது.
11 1949 சிறுவர் செய்யுட் கோவை உரைநூல் கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, பாப்பா பாட்டு, மேலும் சில தனிப்பாடல்களுக்கான தெளிவுரை நூல்
12 1950 வாழ்க்கை ஓவியம் வாழ்வியல்
13 1951 செந்தமிழாற்றுப்படை கவிதை
14 1954 எழுத்தாளர் துணைவன் இலக்கணம்
15 1957 வள்ளுவர் கண்ட மனையறம் திறனாய்வு
16 1961 மலர் மணம் புதினம்
17 1962 வாழும் வழி வாழ்வியல்
18 1963 வள்ளுவர் இல்லம் திறனாய்வு
19 1964 தமிழர் கண்ட கல்வி கல்வி இயல்
20 1964 பணக்காரர் ஆகும் வழி பொருளியல் 1965ஆம் ஆண்டில் இந்திய அரசின் பரிசு பெற்றது
21 1964 இன்ப வாழ்வு பாலியல்
22 1965 தமிழ் அகராதிக்கலை அகராதியியல் 1969ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசு பெற்றது
23 1965 போர் முயற்சியில் நமது பங்கு அரசியல் இந்திய – பாக்கிசுதான் போரின் பொழுது எழுதியது
24 1966 திருக்குறள் தெளிவு உரைநூல் திருக்குறள் தெளிவு இதழில் எழுதிய உரைகளின் தொகுப்பு
25 1967 History of Tamil Lexicography அகராதியியல் 1973ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசு பெற்றது
26 1969 அண்ணா நாற்பது கவிதை க. ந. அண்ணாதுரையின் மறைவின்பொழுது இயற்றிய கையறுநிலைப் பாடல்கள்
27 1970 தமிழ் இலத்தீன் பாலம் மொழியியல்
28 1970 நாலடியார் நயவுரை உரைநூல்
29 1971 தொண்ணூறும் தொள்ளாயிரமும் இலக்கணம்
30 1972 தைத் திங்கள் வானியல் ஆய்வு
31 1972 தமிழ்நூல் தொகுப்புக் கலை நூலியல்
32 1973 திருமுருகாற்றுப்படை தெளிவுரை உரைநூல்
33 1973 புலிசை ஞானியார் அடிகளார் வாழ்க்கை வரலாறு
34 1975 கெடிலக்கரை நாகரிகம் பண்பாட்டு இயல்
35 1982 அம்பிகாவதி காதல் காப்பியம் கவிதை
36 1984 கெடில வளம் பண்பாட்டு இயல்
37 1986 புத்தர் பொன்மொழி நூறு கவிதை
38 1986 கெளதம புத்தர் காப்பியம் கவிதை 1987ஆம் ஆண்டில் புதுவை அரசின் ஐயாயிரம் ரூபாய் பரிசு பெற்றது
39 1987 உலகு உய்ய! உலக ஒருமைப்பாடு
40 1987 இனியவை நாற்பது இனியவுரை உரைநூல்
41 1987 பாரதிதாசரொடு பல ஆண்டுகள் வாழ்க்கை வரலாறு
42 1988 தமிழ்க் காவிரி அரசியல்
43 1988 கருத்துக் கண்காட்சி ஆய்வுக் கட்டுரைகள்
44 1988 இலக்கியத்தில் வேங்கடவேலவன் கோயில் ஆய்வு திருப்பதி வேங்கடவன் கோயிலைப் பற்றிய ஆய்வு
45 1988 உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு அறிவியல் ஆய்வு
46 1988 வழிபாட்டு வரலாறு பண்பாட்டியல்
47 1988 தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு மொழியியல்
48 1988 கடவுள் வழிபாட்டு வரலாறு மெய்யியல்
49 1989 மக்கள் குழு ஒப்பந்தம் ஆய்வுக் கட்டுரைகள்
50 1989 சுந்தர காண்டச் சுரங்கம் திறனாய்வு கம்பராமயாணத்தின் சுந்தர காண்டத்தைப் பற்றிய திறனாய்வு
51 1989 மருந்தாகித் தப்பா மர இனப்பெயர்கள்: மர இனப் பெயர்த் தொகுதி – 1 தாவர இயல் பெயரியல் ஆய்வு
52 1989 நன்னெறி நயவுரை உரைநூல்
53 1990 சுந்தர காண்டச் சூறாவளி மதிப்புரைக்குப் பதில் சுந்தர காண்டச் சுரங்கம் பற்றி மற்றவர்கள் எழுதிய மதிப்புரைக்கு எழுதிய விடையுரை
54 1990 அயோத்தியா காண்ட ஆழ்கடல் திறனாய்வு கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தைப் பற்றிய திறனாய்வு
55 1990 மர இனப் பெயர் வைப்புக்கலை: மர இனப் பெயர்த் தொகுதி – 2 தாவர இயல் பெயரியல் ஆய்வு
56 1990 தெய்விகத் திருமணம் புதினம்
57 1990 தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம் நூற்றொகை 1992 ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசும் 1994ஆம் ஆண்டில் சென்னை மு. அ. சி. அறக்கட்டளை பரிசும் பெற்றது.
58 1991 ஆழ்கடலில் சில ஆணிமுத்துக்கள் திறனாய்வு திருக்குறள் பற்றிய திறனாய்வு
59 1991 பால காண்டப் பைம்பொழில் திறனாய்வு கம்பராமாயணத்தின் பாலகாண்டத்தைப் பற்றிய திறனாய்வு
60 1991 மாதவம் புரிவாள்: மர இனப் பெயர்த் தொகுதி – 3 தாவர இயல் பெயரியல் ஆய்வு
61 1991 முதுமொழிக் காஞ்சி உரை உரைநூல்
62 1992 இயல்தமிழ் இன்பம் ஆய்வுக் கட்டுரைகள்
63 1992 மனத்தின் தோற்றம் ஆய்வுக் கட்டுரைகள்
64 1992 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு திறனாய்வு கம்பராமாயணத்தின் கிட்கிந்தா காண்டத்தைப் பற்றிய திறனாய்வு
65 1992 சிலம்போ சிலம்பு – தித்திக்கும் திறனாய்வு திறனாய்வு சிலப்பதிகாரத்தைப் பற்றிய திறனாய்வு
66 1993 தமிழ் அங்காடி திறனாய்வுக் கட்டுரைகள்
67 1993 ஆரணிய காண்ட ஆய்வுத்திறன் திறனாய்வு கம்பராமாயணத்தின் ஆரணிய காண்ட ஆய்வுத்திறன்
68 1993 நல்வழி உரை உரைநூல்
69 1993 ஞானியார் அடிகள் வாழ்க்கை வரலாறு
70 1993 விளையும் பயிர் முளையிலே தெரியும் வாழ்க்கை வரலாறு

மேற்கண்டவை தவிர பல்வேறு சூழ்நிலைகளில் இயற்றப்பட்ட தனிப்பாடல்களும் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளும் இருக்கின்றன.

இவருடைய இப்படைப்புகள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன

இதழ்கள்

1949 சனவரி 23 ஆம் நாள் தொடங்கி சில ஆண்டுகள் திருக்குறள் தெளிவு என்னும் திங்களுக்கு இருமுறை இதழை வெளியிட்டார். ஒவ்வொரு இதழிலும் திருக்குறள்கள் சிலவற்றிற்கு ஆராய்ச்சி விரிவுரை எழுதினார்.இவ்வுரை இதழ்கள் தொகுக்கப்பட்டு 1963ஆம் ஆண்டில் வள்ளுவர் இல்லம் என்னும் நூலாக வெளியிடப்பட்டது. இவ்விதழில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கள் பேறு ஆகிய மூன்று அதிகாரங்களில் உள்ள முப்பது குறட்பாகளுக்கு எழுதிய ஆராய்ச்சி விரிவுரைகள் முழுமையாகப் பேராசிரியர் சு. ச. அறவணனால் தொகுக்கப்பட்டு 2004 ஏப்ரல் 26 ஆம் நாள் வள்ளுவர் கண்ட மனையறம் என்னும் நூலாக வெளியிடப்பட்டுள்ளன.

1958 அக்டோபர் 22 ஆம் நாள் தொடங்கி சில ஆண்டுகள் தெவிட்டாத திருக்குறள் என்னும் திங்களுக்கு இருமுறை இதழை வெளியிட்டார். ஒவ்வொரு இதழிலும் திருக்குறளின் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்னும் வைப்புமுறையில் ஒவ்வொரு பாலிலும் உள்ள சில குறள்களுக்கு ஆராய்ச்சி விரிவுரை எழுதினார். அவ்வாறு எழுத்தப்பட்ட உரைகளில் 51 குறள்களுக்கான உரைகளைத் தொகுத்து 1991 நவம்பர் 5 ஆம் நாள் ஆழ்கடலில் சில ஆணிமுத்துக்கள் என்னும் நூலாக வெளியிட்டார்.

திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக் கழகம்
1966 சூன் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்பிற்கு அரசின் பதிவையும் பெற்றார். இவ்வமைப்பின் வழியே திருக்குறள், யாப்பிலக்கண வகுப்புகளை நடத்தினார். அவ்வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார்.

வானொலி உரைகள்:
சண்முக சுந்தரனார் வாய்ப்புக் கிடைத்த பொழுதெல்லாம் வானொலியில் இலக்கியப் பேருரைகள் ஆற்றினார். அவற்றுள் சில:

குற்றாலக் குறவஞ்சி, 1949 மே 10ஆம் நாள், இரவு 7:30 மணி முதல் 7:45 மணி வரை, திருச்சி வானொலி நிலையம்.

குடும்பம்:
சுந்தர சண்முகனார் தனது இருபத்திரண்டாவது அகவையில் 1944 மே 26 ஆம் நாள் புதுச்சேரியைச் சேர்ந்த விருத்தாம்பிகை அம்மையாரை மணந்தார்.இவ்விணையர்களுக்கு சு. ச. அறவணன் என்னும் மகனும் அங்கயற்கண்ணி என்னும் மகளும் பிறந்தனர்.

பெற்ற பட்டங்கள், விருதுகள்:
சுந்தர சண்முகனார் 1951ஆம் ஆண்டில் செந்தமிழாற்றுப்படை என்னும் நூலை இயற்றி அரங்கேற்றிய பொழுது, நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அந்நூலிற்கு எழுதிய சிறப்புப் பாயிரத்தில் “சுதை இயற்கவி சுந்தர சண்முகர்” எனக் குறிப்பிட்டார்.பின்னர் சோமசுந்தர பாரதியாரின் பரிந்துரையை ஏற்று, புதுக்கல்விக் கழகம் இயற்கவி எனப் பட்டம் வழங்கியது
இவர் திருக்குறள் தெளிவுரை, திருக்குறள் தெளிவு, தெவிட்டாத திருக்குறள் ஆகிய வெளியீடுகளின் வழியாகவும் தன்னுடைய நூல்கள் பலவற்றிலும் திருக்குறளின் மேன்மையை எடுத்துரைத்தார். இத்தகு திருக்குறள் பரப்பும்பணியைப் பாராட்டித் தமிழக அரசு 1991 சனவரி 15 ஆம் நாள் இவருக்குத் திருவள்ளுவர் விருது வழங்கியது.
இவர் பல துறைகளிலும் நூல்கள் எழுதிய சான்றாண்மையைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 1991 அக்டோபர் 17ஆம் நாள் இவருக்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் பட்டத்தை வழங்கியது.
இவைதவிர பின்வரும் பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார்:
ஆண்டுவிருதுவழங்கியோர்செந்தமிழ்ச் செம்மல்புதுவைத் தமிழ்ச் சங்கம்1972புதுப்படைப்புக் கலைஞர்தமிழ்நூல் தொகுப்புக் கலை வெளியீட்டுவிழாவில் அன்றைய புதுவை ஆளுநரைக்கொண்டு திரு. கு. கா. இராசமாணிக்கம் வழங்கினார்.செந்தமிழ்க் கொண்டல்புதுவை சுப்பிரதீபக் கவிராயர் மன்றம்ஆராய்ச்சி அறிஞர்சிவத்திரு ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர்தமிழ்ச் சான்றோர்சேலம் தமிழ்ச் சங்கம் (தமிழகப் புலவர் குழுவின் வெள்ளி விழாவின் பொழுது)திருக்குறள் நெறித்தென்றல்தமிழக அரசுகுறளாயச் செல்வர்ஈரோடு குறளாய இயக்கத்தின் புதுவைக் கிளை வழங்கியதுதமிழ் ஆய்வுக்கடல்தமிழகச் செங்குந்தர் பெருமன்றம்முனைவர்உலகப் பல்கலைக் கழகம், அமெரிக்கா.

மறைவு:
1946ஆம் ஆண்டு முதலே மூளைக்கட்டி நோயோடு போராடிக்கொண்டிருந்த சுந்தர சண்முகனார் 1997 அக்டோபர் 30 ஆம் நாள் புதுச்சேரியில் காலமானார்.

நினைவேந்தல்கள்:
சுந்தர சண்முகனாரின் மாணாக்கர்களான சொல்லாய்வுச் செல்வர் சு. வேல்முருகன், பாட்டறிஞர் இலக்கியன், புலவர் திருவேங்கடம், பாவலர் ஆ. மு. தமிழ்வேந்தன் ஆகியோர் இணைந்து 1998 மார்ச் 22 ஆம் நாள் சுந்தர சண்முகனார் நினைவுக் கருத்தரங்கம் ஒன்றை புதுச்சேரியில் நடத்தினர்.
இவர்தம் மாணாக்கர்களும் மகன் சு. ச. அறவணனும் இணைந்து சுந்தர சண்முகனார் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி புதுச்சேரியில் திங்கள்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த அறக்கட்டளையினர் 2009 நவம்பர் 12 ஆம் நாள் சுந்தர சண்முகனார் நினைவுக் குறுந்தகடு ஒன்றினை புதுச்சேரியில் வெளியிட்டனர்.

மேலும் இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *