Responsive Menu
Add more content here...

முத்துசாமி முதலியார் (நீல்கிரீஸ் சூப்பர்மார்க்கெட்)

Visits:1553 Total: 2407594

 

சென்னை, கோவையில், பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருப்பவர்கள் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட் என்றாலே சட்டென தெரிந்து கொண்டுவிடுவார்கள். வெறும் 56 ரூபாய் முதலீட்டில் ஆரம்பமான இந்த நிறுவனம் இன்று பல நூறு கோடி ரூபாய் புரளும் பிஸினஸாக மாறியிருப்பது ஆச்சரியமூட்டும் வளர்ச்சி. இந்த வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் முத்துசாமி முதலியார் மற்றும் அவரது மகன் சென்னியப்ப முதலியார்.
பிறப்பு:
திருப்பூருக்கு அருகே இருக்கும் முரட்டுப் பாளையம் நெசவாளர்கள் நிரம்பிய கிராமம். இந்த கிராமத்தில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகம் சொக்கநாதன் கோத்திரம் பங்காளிகள் சவாளியின் மகனாக பிறந்தார் முத்துசாமி முதலியார்.
வாழ்க்கை:
இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், வேலை தேடி நீலகிரிக்குப் போனார். அங்கு சில கடைகளில் வேலை பார்த்தவருக்கு, தபால்களை எடுத்துச் செல்லும் வேலை கிடைத்தது. வெலிங்டனிலிருந்து குன்னூருக்கு தபால்களை தினமும் எடுத்துச் சென்றவருக்கு ஒரு பிஸினஸ் வாய்ப்பு தேடி வந்தது.

 

அந்த சமயத்தில் பட்டேல் என்பவர் குஜராத்திலிருந்து வெண்ணெய்யை வரவழைத்துத் தந்து கொண்டிருந்தார். இவ்வளவு தூரத்திலிருந்து வெண்ணெய் கொண்டு வந்து தருவதில் பட்டேலுக்கு பல சிக்கல். பக்கத்திலேயே கிடைத் தால் நன்றாக இருக்குமே என்று அவர் புலம்பியது தன் சகோதரர் மூலம் முத்துசாமியின் காதுக்கு எட்டியது. அதற்கு தேவையான உபகரணங்களை தந்தால் வெண்ணெய் தயாரித்து தருவதாகச் சொன்னார் முத்துசாமி. உபகரணங்கள் கிடைத்தவுடன் 1896-ல் வெண்ணெய் தயாரிக்கும் வேலையைத் தொடங்கினார் முத்துசாமி. இதன் மூலம் தென்னிந்தியாவில் முதன் முதலில் வெண்ணெய் தயாரிக் கும் வேலையைத் தொடங்கியவர் என்கிற பெருமையும் அவருக்கு கிடைத்தது.
சில ஆண்டுகளில் இன்னொரு பிஸினஸ் வாய்ப்பும் முத்துசாமியைத் தேடி வந்தது. ஊட்டியில் இருந்த வெள்ளைக்காரர் ஒருவர் தன் சொந்த நாட்டுக்குச் செல்ல இருப்பதாகவும், அவர் செய்துவந்த வெண்ணெய் வியாபாரத்தை யாருக்காவது விற்க விரும்புவதாகவும் சொல்ல, முத்துசாமி உடனடியாக அவரைச் சந்தித்து அந்த வியாபாரத்தை வாங்கினார். 1905-ல் ‘தி நீலகிரி டெய்ரி பார்ம்’ தொடங்கியது. இன்றைக்கு நீல்கிரீஸ் நிறுவனம் ‘1905-ம் ஆண்டு முதல்’ என பெருமை பொங்க சொல்லிக் கொள்ளக் காரணம் அன்றே ஆரம்பமான இந்நிறுவனம்தான்.
நீலகிரி டெய்ரி பார்மை முத்துசாமியும் அவரது சகோதரர்களும் நல்லபடியாக நடத்திவர, சகோதரர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, பிரிந்தனர். பிஸினஸிலிருந்து தனித்துவிடப்பட்ட முத்துசாமி யிடம் வெறும் 56 ரூபாய் மட்டுமே இருந்தது. ஆனால், அவரோ மனம் தளர்ந்து விடவில்லை. ஊட்டியிலேயே வேறு இடத்தைத் தேடி, அங்கு வெண்ணெய் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். தரமான வெண்ணெய் தயாரிப்பதற்காக 1927-ல் குஜராத்திற்குச் சென்று அங்கு வெள்ளைக்காரர்கள் நடத்திய பால் பண்ணைகளை பார்த்து, கற்றுக் கொண்டார்.
தனது நிறுவனத்தை முறைப்படி பதிந்து வைத்திருந் தும், அவருக்கு ஒரு பிரச்னை வந்தது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஆங்கர் பிராண்ட் பட்டர் என்கிற வெண்ணெய் ஊட்டிக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகி வந்தது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பைப் போலவே தனது கிரௌன் பிராண்ட் பட்டரை உருவாக்கி இருந்தார் முத்துசாமி. இதனை ஆட்சேபித்து ஆஸ்திரேலிய கம்பெனி முத்துசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.
இதனைக் கண்டு மிரண்டு போன முத்துசாமி ஊட்டியில் இருந்த ஒரு வெள்ளைக்கார வக்கீலிடம் கலந்தாலோசிக்க, ‘உடனே உங்கள் பிராண்டை பதிவு செய்யுங்கள்’ என்று வக்கீல் சொல்ல, அதன்படி பதிவு செய்து, அந்த சான்றிதழை ஆஸ்திரேலிய நிறுவனத்திற்கு அனுப்ப, அந்நிறுவனம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் தனது தயாரிப்பை ஊட்டிக்கு அனுப்புவதை நிறுத்தியது.
இதனையடுத்து கோவை, பெங்களூரு, மைசூர், கொச்சி என பல ஊர்களுக்கு வெண்ணெய்யை அனுப்பியது நீல்கிரீஸ் நிறுவனம். இந்த சமயத்தில் பெங்களூருவில் புதிதாக ஒரு வெண்ணெய் கடையைத் திறந்தார் முத்துசாமி. இந்த கடையை பார்த்துக் கொள்ள அனுப்பப்பட்டார் முத்துசாமியின் இரண்டாவது மகன் சென்னியப்பன்.
இதுவரை சொன்னது, நீல்கிரீஸ் நிறுவனத்தின் முதல் பாகம் என்று சொல்லலாம். சென்னியப்பன் நீல்கிரீஸ் நிறுவனத்தைக் கவனிக்கத் தொடங்கியதில் இருந்து இரண்டாம் பாகம் ஆரம்பம் எனலாம். காரணம், ஓரளவுக்கு வளர்ந்திருந்த நீல்கிரீஸ் நிறுவனத்தை மிகப் பெரியதாக வளர்த்த பெருமை சென்னியப்பனையே சேரும்.
1939-ல் பெங்களூருவில் நீல்கிரீஸ் டெய்ரி பார்மின் கிளையைத் திறந்தபோது சென்னியப்பனுக்கு இருபது வயதுதான். குன்னூரில் அவரால் 9-ம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. பள்ளிப் பருவத்திலேயே தன் தந்தையின் வெண்ணெய் வியாபாரத்திற்கு பக்கதுணையாக இருந்து உதவினார். கூடவே விடுதலைப் போராட்ட உணர்வும் சென்னியப்பனை பாதித்தது. இதற்குமேல் அவர் ஊட்டியில் இருந்தால் சிக்கல் என்று நினைத்த அவரது குடும்பம், அவரை பெங்களூருவில் இருக்கும் கடையை பார்த்துக் கொள்ள அனுப்பி வைத்தது.
அந்த சமயத்தில் பெங்களூருவில் ராணுவ முகாம்கள் இருந்ததால், வெள்ளைக்காரர்கள் அதிக அளவில் இருந்தனர். இவர் களுக்குத் தேவையான வெண்ணெய் பெருமளவில் தந்தது சென்னியப்பனின் நீல்கிரீஸ் நிறுவனம்தான். வெறும் வெண்ணெய் மட்டும் தந்தால் போதுமா, ரொட்டியும் வேண்டும் என்றார்கள். ஏற்கெனவே வெண்ணெய் சப்ளை செய்து கொண்டிருந்த ஒரு பேக்கரியிடமிருந்து முதலில் ரொட்டி, பன்களை வாங்கி, விற்க ஆரம்பித்தார். பிற்பாடு தனியாக ஒரு பேக்கரி திறந்து, சுத்தமான முறையில் ரொட்டி தயாரிக்க ஆரம்பிக்க, அந்த பிஸினஸும் சக்கைப் போடு போட ஆரம்பித்தது.
என்றாலும்கூட அப்போது அதிக அளவில் மக்கள் பிரட் களை சாப்பிடவில்லை. எனவே, பிரட், பன் போன்றவற்றை மக்களிடம் பிரபலப்படுத்த ஆண்டுக்கொருமுறை கேக் கண்காட்சியை நடத்தினார். பத்து நாட்களுக்கு நடக்கும் இந்த கண்காட்சிக்கு ஒருமுறை வந்தவர்கள், இந்நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறியது சென்னியப்பனின் பிஸினஸ் மூளைக்கு கிடைத்த வெற்றி. வெறும் பிரட்டோடு நில்லா மல், சாக்லேட் தயாரிப்பிலும் இறங்கினார். ஆனால், அது பெரிய அளவில் வளர வில்லை.
ஆனால், வெண்ணெய் தயாரிப்பில் ராஜாவாக இருந்த சென்னியப்பனுக்குச் சொந்தமாக பால் பதனிடும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க வேண்டும் என்கிற சிந்தனை இருந்துகொண்டே இருந்தது. 1955-ல் குஜராத்தில் உள்ள ஆனந்திற்குச் சென்று, அங்கு பால் பதனிடும் நிலையங்கள் எப்படி செயல்படுகிறது என்று பார்த்தார். விளைவு, 1962-ல் ஈரோட்டில் பால் பண்ணை ஒன்றை அமைத்தார். தமிழகத்தில் திறக்கப்பட்ட முதல் தனியார் பால் தயாரிப்பு நிலையம் இதுதான். ஈரோட்டில் தயாரான பால் கோவை, பெங்களூரு, மங்களூர், சென்னை என பல பகுதிகளுக்கும் சென்று விற்பனையானது.
இந்த பால் தயாரிப்பு நிலையத்தை நிர்வாகம் செய்கிற மாதிரி தனது தம்பி ராஜா என்கிற செல்லையனை டென்மார்க்கிற்கு அனுப்பி பயிற்சி பெற வைத்தார். தனது மூத்த மகன் ராமச்சந்திரனை ஜெர்மனிக்கு அனுப்பி பேக்கரி தொழில்நுட்பத்தைக் கற்று வந்து, பேக்கரி கடையை நடத்தும்படி செய்தார். தனது இரண்டாவது மகன் கோபால கிருஷ்ணனை அமெரிக்காவில் ஏ.சி. தொழில் நுட்பம் படிக்க வைத்து, தங்கள் தொழிலுக்கு பயன்படுத்திக் கொண்டார். இன்னொரு மகனான குமாரவேலுவை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி கோழி மற்றும் பன்றி வளர்ப்பு பற்றி பயிற்சி பெற வைத்தார். தான் தொடங்கும் தொழிலை தனது குடும்பத்தினரே நிர்வகிக்கும்படி அமைத்துக் கொண்டது சென்னியப்பனின் பிஸினஸ் மூளைக்கு இன்னொரு சான்று.
சென்னியப்பன் ஒருமுறை ஜெர்மனி போனபோது, ஒரே இடத்தில் அனைத்துப் பொருட்களையும் விற்பதை பார்த்தார். அது மாதிரியான ஒரு சூப்பர் மார்க்கெட்டை பெங்களூருவில் திறந்தார். இந்தியாவிலேயே ஆரம்பமான முதல் சூப்பர் மார்க்கெட் இதுதான். இந்த கடைக்கு வந்து பொருட்களை வாங்க பலரும் விரும்பினார்கள். இது மாதிரி ஒரு சூப்பர் மார்க்கெட் சென்னையில் இல்லையே என இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு, 1978-ல் சென்னையிலும் பிற்பாடு கோவையிலும் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டைத் திறந்தார்.
1990-களின் நடுப்பகுதியில் பிரான்சைஸ் அளிக்கிற அளவுக்கு வளர்ச்சி கண்டது நீல்கிரீஸ் நிறுவனம். இன்றைக்கு தென்னிந்தியா முழுவதும் இந்நிறுவனத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிரான்சைஸ் நிறுவனங்கள் இருக்கின்றன.
சென்னியப்பன், 2011-ல் தனது 92-வது வயதில் காலமானார். இன்று விஸ்வரூபம் எடுத்திருக் கும் ரீடெய்ல் செயின் பிஸினஸிற்கு முன்னோடியாக இருந்த சென்னியப்பன் தமிழகத் திற்கே பெருமை சேர்த்தவர் என்பதில் சந்தேகமில்லை.

 

இவரின்
கோத்திரம் பெயர்: சொக்கனாதன் கூட்டம் பங்காளிகள்.
குலதெய்வம்: சென்னிமலை முருகன் மற்றும் கரூர் புன்னம் அங்காளம்மன்.
குலகுரு: இறையமங்கலம் பரஞ்சோதி குருக்கள்.
மேலும் இவரின் பிறந்த தேதி, மறைந்த தேதி, இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *