சாமிநாத முதலியார் ex Chairman
(17.11.1880 – 21.04.1949)
காஞ்சிபுரம் மகாநாடு செங்குந்தர் குல கடைசி நாட்டாண்மை தலைவர்
கந்தபுராணம் சிறப்பும், வரலாற்று சிறப்பும் பெற்றது செங்குந்தர் குலம், தமிழ்க்கடவுள் திருமுருகனின் இளவல்களாக கருதப்படும் குலம் உபசுப்பிரமணிய வம்சம் என்றும் சித்தர்களும்,ஞானியர்களும்,புலவர்களும்,அறிஞர்களும்,தியாகிகளும், குறுதிய மன்னர்களும் தோன்றிய குலம்.
சோழ, பாண்டிய, பல்லவ அரசர்களின் போர்த்தளபதிகளாகவும்,ஆஸ்தான புலவர்களிகவும்,அமைச்சர்களாகவும் திகழ்ந்த குலம்.
தொண்டை மண்டலத்தின் தலைநகர்-காஞ்சிபுரம்.
செங்குந்தர் குலத்தின் தலைநாடு-காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அடுத்த திருத்தணிகைக்கு அருகில் உள்ள மத்தூர் என்ற ஊரில் பல தலைமுறைகளுக்கு முன்னம் பூர்விகமாகக் கொண்ட, காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையத்தில் வாழ்ந்த சைவ சமய சிவநெறிச்செல்வர்,ஒழுக்கச்சீலர் திரு.தணிகைமலை முதலியார் மற்றும் மனோன்மணி அம்மையார் தம்பதியருக்கு திருமகனாக திரு.ம.த சாமிநாத முதலியார் ஆவர்கள் 17.11.1880-ல் பிறந்தார். இவருக்கு ஒரு தம்பி மற்றும் இரு தங்கைகள். தம்பியின் பெயர் முருகேச முதலியார்.
இவரும் இவர் தம்பியும் ஒற்றுமையின் இலக்கணமாக திகழ்ந்தவர்கள்.
திரு ம.த. சாமிநாத முதலியார் அவர்கள் 19-வது வயதிலிருந்தே, பொதுதொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.பொதுநலத் தொண்டிற்காக அண்ணனும், குடும்ப நலத்திற்காக தம்பியும் தங்களை முழுமைப்படுத்தி திட்டமிட்டு வாழ்ந்தனர்.
காஞ்சிபுரம் மகாநாடு 72 கிளை நாடுகளை தன்னகம் கொண்டது காஞ்சிபுரம் மகாநாடு. செங்குந்தர் குலத்தின் நாட்டாண்மைத் தலைவர் ‘ஆண்டவர்’ என்றும் சொல்லத்தக்க மாபெரும் தலைவராக திரு ம.த.சாமிநாத முதலியார் அவர்கள் 1911-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.தலைநாட்டிலும்,கிளைநாட்டுகளிலும் செங்குந்த வாழ் உறவினர்களுக்குள்ளே உண்டான பல கருத்து வேறுபாடுகளைக் களைத்து ஒற்றுமைப்படுத்தினார்.நல்லறங்களுடனும், நற்பண்புகளுடனும், பெருமான நோக்குடனும் குலத்தொண்டுகள் புரிந்தார்.
செங்குந்தர் குல நாட்டாண்மையாக திகழ்ந்தவர் காஞ்சிபுரம் முனிவர்.திரு.நாகலிங்க முதலியார் அவர்கள் ஆலோசனை வகையில் காஞ்சிபுரம் கச்சபேசர் ஆலயத்தில் செங்குந்த மகாஜன சங்கத்தை 30.12.1912ம் ஆண்டில் உருவாக்கினார். எனினும் 29.04.1927 யில் சென்னையில் உருவான தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கமே நிலைத்து வருகிறது. 1929-ல் ஈரோட்டில் நடந்த முதல் செங்குந்தர் மாநாட்டில் முதன்முதலில் செங்குந்தர் குல கொடியை ஏற்றினார். 16,17.05.1931 யில் நடைபெற்ற செங்குந்தர் இரண்டாவது மாநாட்டை காஞ்சி கச்சபேஸ்வரர் ஆலயத்தில் தலைவராக மிகவும் சிறப்பாக நடத்தினார். 27.28.09.1936-ல் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டை அம்பாசமுத்திரத்தில் நடத்தினார். அம்மாநாட்டில் செங்குந்தர் விதவைப் பெண்கள் மறுமணம் பற்றி தீர்மானம் நிறைவேற்றினார்.
காஞ்சிபுரம் நகரமன்ற உறுப்பினராக 24 ஆண்டுகள் பணியாற்றினார். காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவராக 9 ஆண்டுகள் பதவி வகித்தார்.
காஞ்சிபுரம் நகர் மன்றத்தின் முன்னேற்றத்துக்கு பல வகையிலும் சிறப்பாக தொண்டு புரிந்தார்.
நகரமன்ற தலைவராக இருந்த சமயம் கட்டாய ஆரம்பக் கல்விக்கு அடிகோலினார்.
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியத் திருநாடு விடுதலை பெற அண்ணல் மகாத்மா காந்தியடிகள் சுதந்திரப் போராட்டம் நடத்தி வந்தார். தமிழகம் தழுவிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொழுது, 1934-ம் ஆண்டு காஞ்சிபுரம் இரயிலில் வருகை தந்தார். அதுசமயம் நகர மன்றத் தலைவராக இருந்த சாமிநாத முதலியார் அவர்கள், நகர மன்ற உறுப்பினராக இருந்த தியாகி திரு நே.ச.ராஜரத்தினம் அவர்களுடன் ரயில் நிலையம் சென்று அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பளித்தார்.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவராக காஞ்சிபுரம் மைய பகுதியில் (காந்தி மைதானம்) அண்ணல் மகாத்மா காந்தியடிகள் சொற்பொழிவாற்ற மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து தலைமை வகித்தார்.
அன்னியர் ஆட்சிகாலத்தில் நகரமன்றத் தலைவராக இருந்து சுதந்திர போராட்ட கூட்டத்தை துணிந்து நடத்திய பெருமை இவரை மட்டுமே சாரும்.
இவரால் பாதுகாக்கப்பட்ட, எண்ணற்ற தமிழ் சுவடுகளை, தமிழ்தொண்டிக் நிமித்தம் இவர் இல்லம் வருகை தந்த டாக்டர் உ.வே.சாமிநாத அய்யாரிடம் ஒப்படைத்தார் என்பது பெருமைக்குரியது.
அனைத்து பெருமைகளின் நிமித்தமாக, பிற்காலத்தில் அவர் குடியிருந்த தெருவிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அவர் வாழ்ந்த பிள்ளையார் பாளையத்தில் அவரது பெயரால் மேல்நிலைப்பள்ளி உருவாகி சிறப்பாக நடந்து வருகிறது.
பல தலைமுறைகளாக அவரது குடும்பத்தினர் பாதுகாத்து, நிர்வகித்த கச்சபேஸ்வரர் ஆதீனம் ஆலயத்தின் அறங்காவலராகி ஆலய பரிபாலனத்திற்கு நிலைத்து உதவும் வகைக்கு, உறவினர் மற்றும் நல்லோர் வழி தாவாவ்,ஜங்கம சொத்துக்களை பெற்று உரிமைப்படுத்தினர். செங்குந்த மக்களால், ஆண்டுதோறும் உற்சவங்கள் செய்ய ஏற்பாடுகள் செய்தார். மேலும், ஸ்ரீகச்சபோஸ்வரர் ஆலயத்திற்கு மகா கும்பாபிஷேகம் திட்டமிட்டு அரும் பணியாற்றினார். ஓய்வின்றி திருப்பணிக்கு தொண்டாற்றியதால், உடல்நலம் குன்றி 21.04.1947 அன்று கச்சபேஸ்வரர் அடிமையாக வாழ்ந்த அவர் முத்தி நலம் பெற்று கச்சபேஸ்வரர் திருவடிகளை அடைந்தார்.
பொது தவத்தொண்டு, தமிழ்ப்பற்று, சமயப்பற்று, குலப்பற்று, தேசப்பற்று கொண்டு வாழ்ந்தவர். பிறர்நலம் போற்றும் பண்பாளர். தமிழகம் சார்ந்த சமகால, புகழிற்குரியபலருடன் நட்பு பாராட்டி வாழ்ந்தவர் என்றும் அழியாப் புகழிற்குரியவர்!
பன்முகத் தொண்டுகள் புரிந்த இவரின் காலத்திற்குப் பிறகு இவருக்கு ஈடாக பன்முகத் தொண்டு புரிபவர் எவரும் செங்குந்தர்களுள் உருவாகவில்லை .சிறப்பிற்குரிய தொண்டுக்குரிய, பெருமைக்குரிய இடம் வெற்றிடமாகவே உள்ளது.
தகவல் உதவி. காஞ்சி, துரை. சௌந்தரராசன்.
சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி பள்ளி காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடம் முதலில் ஒரு சாவடியாக இருந்தது. அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர் இந்தப் பகுதிக்கு வந்த போது இந்த மண்டபத்தைக் கண்டார். பயன்படாமல் இருந்த மண்டபத்தில் பள்ளி ஆரம்பிக்கலாம் என எண்ணினார். அக்காலத்தில் சாமிநாத முதலியார் அப்பகுதிக்கு சேர்மனாக இருந்தார். எனவே, அவரின் பெயராலேயே ஆரம்பப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை அப்பள்ளி இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் ஒரே ஒரு மண்டபமாக இருந்த அந்த பள்ளி இப்போது நான்கு கட்டிடங்களுடன் செயல்பட்டுவருகிறது இப்பள்ளி அமைந்துள்ள தெருவின் பெயர் கிருஷ்ணன் தெரு. இந்த தெரு பிள்ளையார் பாளையத்தின் இதயப்பகுதியில் அமைந்துள்ளது. எனவே இப்பள்ளி பற்றியும் அதன் ஆரம்ப கால கதைகள் குறித்தும் இப்பகுதியில் பெரும்பாலான மக்களுக்குத் தெரியும். இப்பள்ளியின் மத்தியில் ஒரு பெரிய புங்க மரம் ஒன்று உள்ளது. ஆரம்பகாலத்தில் அந்த மரத்தடியில் தான் பெரும்பாலும் வகுப்புகள் நடைபெறும். தற்போதும் சில சமயங்களில் அங்கு வகுப்புகள் நடைபெறுகின்றன. இடைவெளி நேரங்களில் சிறுவர் சிறுமியர் இங்கு விளையாடுவர். இப்பள்ளி ஆரம்ப பள்ளி ஆதலால் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இங்கு உள்ளன. ஆரம்பத்தில் தமிழ்வழி கல்வி மட்டுமே போதிக்கப்பட்டது. இப்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆங்கில வழி கல்வியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயில, இதே தெருவில் சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆரம்ப காலத்தில் பிள்ளையார் பாளையம் பகுதி மாணவ மாணவியர் மட்டுமே பயின்று வந்தனர். அதன் பின் தற்போது பக்கத்து காலனிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து பயிலுகின்றனர்.