Responsive Menu
Add more content here...

வில்லாதி வில்லன் பி. எஸ். வீரப்பா

Visits:442 Total: 2674449

 செங்குந்தர் கைக்கோள முதலியார் 

     ⚜️குலத்தோன்றல்⚜️
புகழ்பெற்ற திரைப்பட நடிகர்
         பி. எஸ். வீரப்பா

 ( 9.10.1911 – 9.11.1998)

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அக்காலத்தில் பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்த இவர் திரைப்படத் வீரலட்சுமிவிருது, கலைமாமணி விருது, ராஜீவ் காந்தி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
 
ஆரம்ப கால வாழ்க்கை
1911-ம் ஆண்டு காங்கேயத்தில் ஊர் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்த வீரப்பா பொள்ளாச்சியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார். படிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த போதிலும், அதிகப்படியான குடும்ப உறுப்பினர்களும், குறைந்த குடும்ப வருமானம் இருந்த காரணத்தினாலும் பல சிறு வியாபாரம், தொழில்களில் ஈடுபட்டார். 
சென்னைக்கு வரும் முன்னர் கோயில் திருவிழாக்களில் நடைபெறும் நாடகங்களில் நடித்து வந்தார். சிவன்மலையில் அப்படி நடைபெற்ற ஒரு நாடகத்தில் இவரைப் பார்த்த கே. பி. சுந்தராம்பாளும் அவரது சகோதரரும், சென்னைக்கு வருமாறும், திரைப்படங்களில் நடிக்குமாறும் வலியுறுத்தினர். சென்னைக்கு வந்த பிறகு கே. பி. சுந்தராம்பாள் தன்னுடைய ஒரு சிபாரிசுக் கடிதத்துடன் இவரை இயக்குனர் எல்லீஸ் ஆர். டங்கனிடம் அனுப்பினார்.
 
திரைப்பட வாழ்க்கை
பி. எஸ். வீரப்பாவின் உரத்த சத்தத்துடன் கூடிய பயங்கரச் சிரிப்பு அந்தக்காலத்துத் திரைப்பட ரசிகர்களிடையே மிகப் பிரபலம். கே. பி. சுந்தராம்பாள் முக்கிய வேடத்தில் நடித்த, டங்கனின் மணிமேகலை என்கிற திரைப்படத்தில் வீரப்பா அறிமுகமானார். தனது முத்திரைச் சிரிப்பான உரத்த ஹா ஹா ஹா.. என்பதை சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்தில் செய்தார். 
இந்தச் சிரிப்பிற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக அதன் பிறகு, இதை தனது பாணியாக எல்லா படங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தார். எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் போன்றோரிலிருந்து கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் படங்கள் வரை நடித்துள்ளார்.
70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்
இவர் நடித்த முக்கிய திரைப்படங்கள்
ஸ்ரீ முருகன் (1946)
இதய கீதம் (1950)
மாப்பிள்ளை (1952)
மதன மோகினி (1953)
ஜெனோவா (1953)
நாம் (1953)
காவேரி (1955)
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956)
மர்ம வீரன் (1956)
மகாதேவி (1957)
தங்கமலை ரகசியம் (1957)
செங்கோட்டை சிங்கம் (1958)
சிவகங்கை சீமை (1959)
 
பி. எஸ். வீரப்பாவின் புகழ்பெற்ற நடிப்பு பாணிகள், முத்திரை வசனங்கள்
எதிர் நாயகன்களுக்கு உரிய உரத்த ஹா ஹா ஹா.. சிரிப்பு (சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்திலிருந்து, கிட்டத் தட்ட எல்லா படங்களிலும்)
சபாஷ், சரியான போட்டி.. (வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில்)
மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி (மகாதேவி திரைப்படத்தில்)
 
திரை வாழ்க்கையைப்பற்றி:
நல்லதொரு திரைப்படம் நம் மனதில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும். ஆழமான கதையம்சம் கொண்ட படங்களைப் பார்க்கும் போது அவ்வுணர்வு நம்மை அறியாமல் தொற்றிக் கொள்ளும். போலவே அப்படத்தில் மேலோங்கி நிற்கும் உணர்ச்சிகளால் நாமும் உந்தப்படுவோம். 
சோகப் படங்களைப் பார்க்கும் போது கண்ணீர் விடவும், நகைச்சுவைப் படங்களைப் பார்த்து விலா நோகச் சிரித்து மகிழ்வதும் உண்டு. காரணம் ஒரு திரைப்படம் நம்மை நேரடியாக உணர்வுரீதியாக பாதிக்கிறது. தமிழக மக்கள் வாழ்க்கையில் அழுத்தமான பாதிப்புக்களை அந்நாட்களில் திரைப்படங்கள் ஏற்படுத்தியது. நடிகர், நடிகைகள், குணசித்திர நடிகர்கள், வில்லன்கள் என அனைவரும் மக்களால் வெகுவாக போற்றப்பட்டனர். 
ஒரு திரைக்கலைஞரை ஏதேச்சையாக சந்திக்கும் சாமான்னிய ரசிகன் அடையும் உவகை வார்த்தையில் சொல்ல முடியாது. அந்தளவுக்கு திரைப்படங்கள் மக்கள் வாழ்க்கையுடன் ஒன்று கலந்திருந்தன.
அத்தகைய காலகட்டத்தில் தோன்றிய பி.எஸ். வீரப்பா எனும் கலைஞரை நினைக்கும்தோறும் நம் மனதில் முதலில் உதிப்பது அவரது கருப்பு வெள்ளைப் படங்களில் வாளேந்தி அரசாடையில் அவர் பேசும் தீப்பொறி வசனங்கள்தான். அந்தக் கால படங்களை பெரும்பாலும் ஒரு சில வகைமையில் அடக்கிவிடலாம். குடும்பச் சித்திரம், சாகஸத் திரைப்படம், பேய்ப் படம், நகைச்சுவை படம், சரித்திரப் படம் உள்ளிட்டவை.
அதில் சரித்திரப் படங்களுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. அத்திரைப்படங்களில் நடிப்பவர்களின் நடை, உடை, பாவனை மட்டுமல்ல ஆடை, ஆபரணங்களும் பெரிதும் ரசிக்கப்பட்டன. வீரப்பாவும் மக்கள் மனதில் பதிந்தது இத்தகைய ரசிகப்பார்வையின் வீச்சினால்தான்.
வில்லன்களுக்கு நட்சத்திர அந்தஸ்து அளித்தவர் பி.எஸ்.வீரப்பா என்றால் மிகையல்ல. உடல்மொழியிலும், காத்திரமான குரல் வழியிலும், தான் நடித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்து பார்வையாளர்களை கவர்ந்த அழகான வில்லன் நடிகர் அவர். 
தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இயல்பினர் வீரப்பா. அவரது தனித்தன்மையே அசலான உடல்மொழி, குரல் வளம், மற்றும் தமிழை மிகவும் அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கும் பாங்கு. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த வில்லத்தனமான சிரிப்பு.
1911-ம் ஆண்டு காங்கேயத்தில் பிறந்த வீரப்பா பொள்ளாச்சியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார். இளம் வயதில் படிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும், வீட்டின் வறுமைச் சூழல் காரணமாக படிப்பைத் தொடரவில்லை. முரட்டு சுபாவம், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய குணம் என்று வளர்ந்த அவரது குடும்பம் மிகவும் கட்டுக்கோப்பானது. குடும்பப் பிரச்னையால் இளம் வயதிலேயே பணத்தேவைக்காக சிறு வியாபாரம், தொழில்களில் ஈடுபட்டார். சென்னைக்கு வரும் முன்னர் கோயில் திருவிழாக்களில் நடைபெறும் நாடகங்களில் நடித்து வந்தார். அப்படி ஒரு தடவை சிவன்மலையில் நடைபெற்ற ஒரு மேடை நாடகத்தில் இவரைப் பார்த்த கே.பி.சுந்தரபாம்பாளுக்கும், அவரது சகோதரருக்கும் வீரப்பாவின் நடிப்பு பிடித்ததால், அழைத்து மனதார பாராட்டினர். அது அவரது வாழ்வில் திருப்புமுனையாக நிகழ்ந்த சம்பவம்.
அச்சமயத்தில்தான் வீர்ப்பாவுக்கு குறுகிய வட்டமான நாடகத்தில் நடிப்பதில் உடன்பாடில்லாமல் போனது. பெரிய திரையில் தோன்ற ஆசைப்பட்டார். சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். ஆனால் வழியறியாது திகைத்தார். மதராஸுக்கு வந்து சினிமாவில் நடிக்க ஆலோசனை கூறிய கே.பி.சுந்தராம்பாளிடமே சரண் அடைந்தார் வீரப்பா. மணிமேகலை படத்தை இயக்குனர் எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிக் கொண்டிருந்தார். அப்படத்தில் கே பி சுந்தராம்பாளுக்கு முக்கியமானதொரு வேடம். ஒருவருக்கு உதவுகிறேன் என வாக்களித்துவிட்டால் அதை முடிக்காமல் வேறு வேலை செய்து பழக்கமில்லாதவர் கே.பி.சுந்தராம்பாள். வீரப்பா கேட்ட உதவி அவர் மனதில் உறுத்திக் கொண்டிருக்கவே, எல்லீஸ் ஆர்.டங்கனிடம் படத்தில் ஏதாவது ஒரு வேடத்தில் வீரப்பாவை நடிக்க வைக்க முடியுமா என்று உதவி கோரி ஒரு கடிதத்துடன் டங்கனை சந்திக்க வீரப்பாவை அனுப்பி வைத்தார். அச்சமயத்தில் மணிமேகலையில் ஒரு வேடம் அவருக்காகவே காத்திருந்ததைப் போல் இருக்க, திரைவானில் மற்றுமொரு நட்சத்திரமானார் வீரப்பா. 
அதன்பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை தொடர்ந்து பெற்றார்.
வீரப்பாவின் முத்திரைச் சிரிப்பான உரத்த ஹா ஹா ஹா என்ற அதிரடி சிரிப்பு முதன்முதலில் வெளிப்பட்டது சக்ரவர்த்தி திருமகன் என்ற படத்தில்தான். வாய்விட்டு ஓங்கி ஒலித்தது அந்த வித்யாசமான சிரிப்பு. வில்லத்தனத்தின் ஒட்டிமொத்தத்தையும் ஒரே சிரிப்பில் வெளிப்படுத்த முடியும் என நிருபித்த அட்டகாசமான அந்த சிரிப்புக்கு திரையரங்கில் நிறைய கைதட்டல் கிடைத்தது. 
அவரது நடிப்பையும் சிரிப்பையும் பார்ப்பதற்கே ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அப்படத்தைக் கண்டு மகிழ்ந்தனர். அந்நாட்களில் வீரப்பாவின் சிரிப்பை வைத்து குழந்தைகளை அச்சுறுத்துவார்களாம். அந்த அளவிற்கு வீரப்பா திரையில் சிரித்தால், அரங்கிலுள்ள குழந்தைகள் அலறி அழுதுவிடுமாம்.
சக்கரவர்த்தி திருமகனில் தொடங்கிய அந்த வெற்றிச் சிரிப்பு அதன்பிறகு அவரது தனித்த பாணியாகி விட்டது. ஒவ்வொரு படத்தில் கதையின் சூழலுக்கு ஏற்றபடி தனது அக்மார்க் சிரிப்பை பயன்படுத்த தவறவில்லை வீரப்பா. முருகன் என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தார் வீரப்பா. அந்தப் படத்திலிருந்து இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதிவரை தொடர்ந்தது. பொன்மனச் செம்மல் எனப் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர், தான் நடிக்கும் படங்களில் தனக்கு எதிர்நாயகனாக வீரப்பாவையே போடும்படி கேட்டுக் கொள்வாராம். கே.பி.சுந்தராம்பாள் அறிமுகப்படுத்த, எம்.ஜி.ராமச்சந்திரன் வழிநடத்த, பி.எஸ்.வீரப்பாவின் திரைவாழ்க்கை தலைநிமிர்ந்து பயணித்தது.
மக்களிடையே இந்தக் கூட்டணி அமோக வரவேற்பையும் பெற்றது. எம்.ஜி. ஆருக்கு சரி சமமான வில்லன் நடிகர் வீரப்பாதான் என்று எழுதினர் அன்றைய திரை விமரிசகர்கள். காரணம் ஒரு நாயகனுக்கு தக்கபடியாக, அவனை எதிர்கொண்டு அவனுடன் சமர் செய்ய அதே அளவு சக்திவாய்ந்த வில்லன் இருந்தால்தான் நாயகனின் சாகஸங்கள் எடுபடும். வீரப்பாவின் உடற்கட்டும் முகவெட்டும், வில்லனாக நடிக்கும்போது அவர் அப்பாத்திரமாகவே மாறிவிடும் மாயமும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன. ஒவ்வொரு படத்திலும் பிரத்யேகமாக ஒரு பாணியை முயற்சி செய்து அவரது ரசிகர்களை திருப்திபடுத்தும் வழக்கமும் வீரப்பாவிடம் இருந்துவந்தது. அதனால் தன்னிடம் வந்த எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தார் வீரப்பா. 
காலப்போக்கில் தனக்கென தனி பாணியையும் உருவாக்கிக் கொண்டார்.
வீரப்பாவும் எம்.ஜி.ஆரும் படப்பிடிப்பில் இருக்கும் சமயத்தில் அந்த இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். எம்.ஜி.ஆர்தான் வீரப்பாவிற்கு வாள் வீச்சு கற்றுக் கொடுத்தவர். திரையில் இருவரும் அதி அற்புதமாக கனல் தெறிக்க சண்டையிடுவதன் பின்னணியில் இருவரும் எடுத்த தீவிர பயிற்சிகள்தான் காரணம். ஒருமுறை படப்பிடிப்பின் போது வீரப்பாவுக்கும் எம்.ஜி.ஆரும் நடிக்கும் வாள் சண்டை படக்காட்சியை எடுத்துக் கொண்டிருந்தனர். சூழ்நிலை மறந்து திடீரென்று பள்ளத்தில் உருண்டு விழப் போனார் வீரப்பா. எம்.ஜி.ஆர் மட்டும் அச்சமயத்தில் கவனித்து காப்பாற்றா இருக்காவிட்டால்,  விபத்துக்குள்ளாகி வீரப்பா எனும் கலைஞரை திரைத்துறை இழந்திருக்கும். அடிக்கடி இவ்விஷயத்தை நினைவுகூரும் வீரப்பா எம்.ஜி.ஆர் ஒரு மாமனிதர், தனக்கு திரைவாழ்க்கையில் கைகொடுத்தது மட்டுமின்றி, உயிரைக் காப்பாற்றவும் செய்தார். தோள் கொடுப்பான் தோழன் எனும் பதத்துக்கு உதாரணமாக விளங்கியவர் எம்.ஜி.ஆர் என நெகிழ்ச்சியாகக் கூறி மகிழ்வார். தொடர்ந்து எம்.ஜி.ஆர் வீரப்பா ஜோடி பல படங்களில் நடித்து வெற்றிக் கூட்டணியாக வாகை சூடிக் கொண்டிருந்தது திரை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் அவருக்கு வீரப்பாதான் வில்லன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனோவா, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், நாடோடி நண்பன், மீனவ நண்பன், ராணி லலிதாங்கி, பத்தினி தெய்வம், பதிபக்தி, நாடோடி மன்னன், ராஜராஜன், யார் நீ, நவரத்தினம், நீலமலை திருடன், பார்த்திபன் கனவு, கைதி கண்ணாயிரம் உள்ளிட்ட  பல படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பாற்றலால் கதாநாயகன் அளவிற்கு, அதிலும் சில படங்களில் நாயகனை விட வில்லன் கதாபாத்திரத்தை வியந்தோகிப் பேசச் செய்தவர் வீரப்பா.
வீரப்பா பேசும் அனல் தெறிக்கும் வசனங்களும் அந்நாட்களில் மிகவும் பிரபலம். சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில், எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த மகாதேவி என்ற படத்தில் வீரப்பா பேசிய வசனங்கள் காலம்கடந்தும் ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்த ஒன்று. 
அப்படத்தில் நடிகை சாவித்திரியின் பெயர் மகாதேவி. வீரப்பா சாவித்ரியை காதல் பொங்க பார்க்கும் பார்வையும், ‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி’ என்று பேசும் வசனமும் காலத்தால் அழிக்க முடியாத வல்லமை பெற்றது. அன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் இந்த வசனத்திற்கு கைதட்டல்களையும் விசில்களை பலத்த கரகோஷத்தையும் திரை அரங்குகளில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். மேலும் காதலிக்கும் இளைஞர்கள், தங்கள் காதலியின் பெயரை சேர்த்து ‘மணந்தால் மீனாட்சி, இல்லையேல் மரணதேவி’ என்று கூறி மகிழ்வார்களாம்.
1956-ம் ஆண்டு வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் பி.எஸ்.வீரப்பா தலைமையில் திருடர்கள் அனைவரும் அணிவகுத்து குதிரையில் வரிசையாக வரும் காட்சி, அழகியலுடனான ஒரு திரை அனுபவத்தை அள்ளித் தரும். ‘அண்டா காகசும் அபு காகசம் திறந்திடு சீசே’ என்று அவர் ஒரு மந்திரத்தைக் கூறி அந்தக் குகைக் கதவைத் திறக்கச் செய்யும் காட்சி அன்றைய ரசிகர்களை சொக்கிப் போகச் செய்தது. ‘கொள்ளையடிப்பதும் ஒரு கலைதான்’ என்று வீரப்பா பேசிய வசனமும் பெரிதும் சிலாகிக்கப்பட்டது.
கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப வெறுப்பை உமிழ்ந்து நடிப்பதால், நடிப்பே என்று அறிந்திருந்தாலும் சில வில்லன் நடிகர்களை மக்கள் வெறுத்தார்கள். 
ஆனால்  வீரப்பாவைப் பொறுத்தவரையில், ஒரு கதாநாயகனுக்கு மனதில் இடம் கொடுத்தது போல் ரசிகர்கள் அவரை கொண்டாடினர். அந்தளவிற்கு ரசிகர்களின் மனதில் நின்று நிலைத்தார். மேலும் வீரப்பாதான் இன்றைய பன்ச் வசனங்களுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர். வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் ஜெமினி கணேசன் அருகில் அமர்ந்து, வைஜெயிந்திமாலா, பத்மினி இருவருக்கு இடையே நடக்கும் போட்டி நடனத்தை ரசித்தபடி, ‘சபாஷ் சரியான போட்டி’ என்று நறுக்கென்று கூறுவார். அந்தச் சிறிய வசனமும், அந்த டைமிங் என்று சொல்லப்படும் கணநேர கவன ஈர்ப்பும் அன்றும் இன்றும் என்றென்றும் ரசிகர்களால் போற்றப்பட்டது. ‘ஜிலு ஜிலுஜிலுவென நானே ஜகத்தை மயக்குவேனே’ என்ற அந்தப் பாடலை விட அந்த வீரப்பாவின் நறுக் வசனமே அதிக சபாஷ் பெற்று காலம் தாண்டி அவர் புகழ் பேசிக் கொண்டிருக்கிறது.
‘கற்றோரை கற்றோரே காமுறுவர்’ என்பதைப் போல வீரப்பாவின் நடிப்பாற்றலுக்கு ஆகச் சிறந்த ரசிகர் ஒருவர் திரைத்துறையிலே உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் அது. அவர் வீரப்பாவின் பெரிய ரசிகர் ஆவார். இப்படி வீரப்பாவின் புகழ் ஓங்கி கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்க, தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தான் பெரிதும் நேசிக்கும் திரையுலகிற்கு அர்ப்பணம் செய்தார். அவரது வாழ்க்கைத் துணையின் பெயர் வீரலட்சுமி. 
ஹரிஹரன் என்ற மகன் இத்தம்பதியருக்கு உண்டு.
 
சிற்றாப்புகள் 
மூன்று தலைமுறை நடிகர்களுக்கு வில்லனாக நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையை உடையவர் வீரப்பா. 1950-களில் தொடங்கி 1970-வரையில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் உள்ளிட்ட நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வந்தவர், அடுத்த காலகட்ட கதாநாயகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த் போன்ற நடிகர்களுக்கும் வில்லனாக நடித்தார். 
இப்படி தனது தொடர் பங்களிப்பை அசராத நடிப்பில் நல்கிக் கொண்டிருந்தவர், படத் தயாரிப்பிலும் ஈடுபடத் தொடங்கினார்.
 
தயாரிப்பாளர்
1970-ம் ஆண்டுக்கு பின் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் நடிப்பை விட தயாரிப்பில் ஆர்வம் கொண்டார், நீங்களும் ஹீரோதான் என்ற படத்தில்தான் வீரப்பா கடைசியாக நடித்தார். தனது பி.எஸ்.வி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்ப்பாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்தார். காலச் சூழலில் சில படங்களில் தோல்வியையும் சந்தித்தார். தன் வாழ்நாள் முழுவதும் நடித்து சம்பாதித்த பணம் மொத்தத்தையும் சினிமாவில்தான் இழந்தார் இந்தப் பெரும் கலைஞர் என்பது துயர்மிகு உண்மை.
அவரது ஒரே மகன் பி.எஸ்.வி ஹரிஹரனும் தந்தையுடன் சேர்ந்து திரைப்பட துறையில் ஈடுபட, சில படங்கள் தொடர்ந்து தோல்வியுறவே அவர்களுடைய சொத்துக்கள் மெள்ள கரைந்தது. சொந்த வீட்டைத் துறந்து வாடகை வீட்டில் குடிபுகும் நிலை வந்தது. இதற்குக் காரணம் அவர் எடுத்த சில தவறான முடிவுகள். ஆனந்தஜோதி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த அவரது நிறுவனம், சிவாஜி நடிப்பில் தமிழில் 1962-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ஆலயமணி திரைப்படத்தை, 1968-ம் ஆண்டு ’ஆத்மி’ என்ற பெயரில் ஹிந்தியில் தயாரிக்க, அது படுதோல்வி அடைந்தது. திலீப் குமார் என்ற பெரும் நடிகர் அதில் நடித்திருந்த போதும், அந்தப் படம் ஹிந்தி ரசிகர்களைக் கவரவில்லை. அதனால் திலீப் குமார் வீரப்பாவுக்கு உதவ நினைத்து, தனது மிகப் பெரிய வெற்றிப் படமான கங்கா ஜமுனாவின் தமிழ் உரிமையை கடும் போட்டிக்கு இடையே வீரப்பாவுக்கு இலவசமாகவே தந்தார். ஆனால் வீரப்பாவின் கெட்ட நேரம், அந்தப் படம் தமிழில் எடுபடவில்லை. இரண்டு தவறான முடிவுகளால் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சேர்த்த சொத்துக்களை இழந்து தவித்தார் வீரப்பா. அதன்பின் மீண்டும் படங்களில் தொடர்ந்து நடிப்பதன் மூலம் ஓரளவுக்கு தனது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொண்டார்.
 
மறைவு:
உடல்நலக் குறைவால் தனது 87-வது வயதில், நவம்பர் 9, 1998 அன்று உயிர் நீத்தார் வீரப்பா. அவரது பூத உடலுக்குத்தான் மறைவே அன்றி அவரது புகழுடல் இன்றும் திரையில் ‘ஹாஹாஹா’வென வெற்றிச் சிரிப்புடன் வலம் வருகிறது. மாபெரும் கலைஞர்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அவர்களது திரை வாழ்க்கையில் நிகழும் ஒரு சம்பவம். அதையும் மீறி தன் ஆன்ம பலத்தால் என்றென்றும் புகழ் வெளிச்சத்தில் திளைக்கும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அத்தகைய ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் பி.எஸ்.வீரப்பா.
வீரப்பா பற்றிய (YouTube video) காணொளிகள் 👇
 
 
 
மேலும் இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *